அனைத்து 9ம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ்?...
அரசு பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் முடியும் முன்பே, 10ம் வகுப்புக்கான புதிய புத்தகங்கள் பள்ளிகளில் வழங்கப்பட்டன. இதனால், இந்தாண்டு 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் "ஆல் பாஸ்" அறிவிக்க முடிவு செய்துள்ளதாக, கல்வி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஏப்.,18 முதல், 6 - 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் துவங்கின. 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (ஏப்.,28) கடைசி தேர்வான சுற்றுச்சூழல் அறிவியல் தேர்வு நடக்கிறது. இரு தினங்களுக்கு முன், 10 ம் வகுப்பு சமச்சீர் கல்விக்கான புதிய புத்தகங்களை பள்ளிக்கல்வி துறை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பி வைத்தது.புத்தகங்களை பெற்ற தலைமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்க, அதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருந்தனர். உயர் அதிகாரிகளிடமிருந்து வந்த வாய்மொழி உத்தரவையடுத்து, 9 ம் வகுப்பு தேர்வை முடித்த மாணவர்களுக்கு, 10ம் வகுப்புக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டன.தேர்வுகள் முடிந்து, விடைத்தாள் திருத்தி, முடிவு தெரியாமல் உள்ள நிலையில், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 10ம் வகுப்புக்கான புத்தகங்கள் வழங்கியிருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து கல்விதுறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது 8 ம் வகுப்பு வரை "ஆல் பாஸ்" முறை உள்ளது. இந்தாண்டு 9ம் வகுப்புக்கும் இதை நீட்டிக்க வாய்ப்புள்ளது. இதனால்தான் தேர்வு முடிவதற்கு முன்பே, புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.ஆனால், தெளிவான உத்தரவு இல்லாததால் 9 ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும்போது மாணவர்களை பெயில் போடலாமா? என்ற சந்தேகம் ஆசிரியர்களுக்கு உள்ளது, என்றார்.
Comments
Post a Comment