தமிழகம் முழுவதும் இன்று ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்

தமிழகம் முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு இன்று தொடங்கியது. டெல்டா மாவட்டங்களில் 10 ஆயிரம் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியை தொடங்கினர். நாடு முழுவதும் சமூக, பொருளாதார மற்றும் ஜாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதில் ஈடுபடும் வருவாய் துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று முதல், வீடு வீடாக சென்று மக்களின் சமூக, பொருளாதார, ஜாதிவாரியாக தகவல்கள் பதிவு செய்து வருகின்றனர். ஒவ்வொரு வீட்டுக்கும் 2 ஊழியர்கள் வருவார்கள். ஒருவர் ஒரு படிவத்தில் விவரங்களை எழுதிக் கொள்வார். இன்னொருவர் லேப் டாப்பில் பதிவு செய்வார். பின்னர் ஒப்புகை சீட்டு வழங்கப்படும். குடும்ப தலைவரின் கையெழுத்தையும் இன்னொரு ஒப்புகை சீட்டில் கணக்கெடுப்பாளர்கள் பெற்று கொள்வார்கள். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் என 4 வகையாக பிரித்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மக்களின் பொருளாதார நிலை எப்படி உள்ளது. எந்த மாதிரியான வீடுகளில் வசிக்கின்றனர். வேலை, வருமானம், ஜாதி, கல்வி, மாற்றுத் திறனாளி உள்ள வீடு மற்றும் வீடு இல்லாதவர்களின் எண்ணிக்கையை அறிதல், எதிர்கால வளர்ச்சி திட்டங்களை தீட்ட இந்த புள்ளி விவரங்களை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்காக இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகள், 7 பேரூராட்சிகள், 4 நகராட்சிகளில் 1,500 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், சுய உதவிக் குழுவினர் என 1500 பணியாளர்கள் கணக்கெடுக்கின்றனர். புதுக்கோட்டையில் கணக்கெடுப்பு பணி சிறப்பாக நடைபெற சரியான விவரங்களை அளித்து பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் கலையரசி கேட்டு கொண்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணியை இன்று காலை வாலாஜா நகரில் கலெக்டர் அனுஜார்ஜ் தொடங்கி வைத்தார். தஞ்சையில் நகராட்சி தலைவர் சாவித்ரி கோபால் வீட்டில் இன்று கணக்கெடுப்பு பணி தொடங்கியது. டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 10 ஆயிரம் பணியாளர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இக்கணக்கெடுப்பில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் கண்டறியப்படும். பொதுமக்கள் சரியான புள்ளி விவரங்களை அளிக்க வேண்டும். இதற்கு அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும் என அரசு கேட்டு கொண்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.