புதிய 8627 பட்டதாரி ஆசிரியர், 9,600 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம்: ஆன்-லைன் கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை அன்று ஆன்-லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.
அதேபோல், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (டிச.11) ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.

புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் அளித்துள்ள வீட்டு முகவரியைச் சார்ந்த மாவட்டத்தில் நடைபெறும் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.

அந்தந்த மாவட்டத்துக்குள் நியமனம் கோருபவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் நியமன ஆணை பெற இயலாதவர்கள் மற்றும் பிற மாவட்டத்திற்கு பணி நியமனம் கோருபவர்கள் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என தேவராஜன் அறிவித்துள்ளார்.

15 ஆயிரம் காலியிடங்கள்: அரசு மேல்நிலை, உயர் நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் புதிய பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் கோரலாம். காலியிட விவரங்களில் அந்தந்த மாவட்டங்களில் கலந்தாய்வு நடைபெறும் இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும்.

பணியிடங்களைத் தேர்வு செய்த பிறகு, அவர்களுக்கான பணி நியமன ஆணைகள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் டிசம்பர் 13-ம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைநிலை ஆசிரியர்களுக்கு...

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு நடைபெறும் இடங்களிலேயே இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.

இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மிகவும் குறைவு என்பதால் இந்தக் கலந்தாய்வு விரைவாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கலந்தாய்வில் பணியிடங்களைத் தேர்ந்தெடுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் 13-ம் தேதி விழாவில்தான் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இனி 2 புத்தகங்கள்

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள்- கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.